"கணவன் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி.. என்னை மிரட்டி பலாத்காரம்" - நரக வேதனையில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள்.. ஆந்திர போலீசின் அராஜகம்
கிருஷ்ணகிரி அருகே, 'ஜெய்பீம்' பட பாணியில் விசாரணை என்ற பெயரில் அத்துமீறி பெண்கள் உட்பட10 பேரை அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்த ஆந்திரா போலீசாரின் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
பொய்யான வழக்கு போட்டு பழங்குடியின நபரை துன்புறுத்தி கொலை செய்த சம்பவத்தை, ஜெய்பீம்' திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது. அதே பாணியில் தான், தற்போது கிருஷ்ணகிரி அருகே புளியாண்டப்பட்டி கிராமத்தில், திருட்டு வழக்கு எனக்கூறி, அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தில், குறவன் சமுதாயத்தை சேர்ந்த ரேணுகா, தமிழரசன், அருணா, கண்ணம்மாள் சத்யா உள்ளிட்ட 10 பேரை, கடந்த 11-ம் தேதி, திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க, ஆந்திரா போலீசார் அழைத்து சென்றனர். இந்த திருட்டு வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக ஆன்லைனில் காவல்துறைக்கு புகார் அளித்த பெண்ணையும், உள்ளூர் போலீசார் உதவியுடன் ஆந்திரா போலீசார் மிரட்டி, புகாரை திரும்ப பெற வைத்த நிலையில், அந்தப் பெண்ணையும் சித்ரவரை செய்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து விவகாரம் சூடுபிடிக்கவே, ஆந்திர மாநிலம் சித்தூரில் வைக்கப்பட்டிருந்த 10 பேரில், 8 பேரை கம்யூனிஸ்ட் கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் புகாரின் பேரில் மீட்டனர்.
இதனிடையே விசாரணைக்கு அழைத்துச் சென்ற சித்தூர் போலீசார், உடலில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் அதில் இரண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"என் கண்முன்னே கணவரை கண்மூடித்தனமாக அடித்தனர்"
"கண் முதல் பிறப்புறுப்பு வரை மிளகாய் பொடி தூவினர்"
"மீண்டும் கணவரை பயங்கரமாக அடித்தனர்"
"என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்"
ஆந்திராவில் இருந்து வந்து போலீசார் கைது செய்தது சடடவிரோதமானது எனக்கூறிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு,
இதற்கு தமிழக காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
"ஆந்திராவில் இருந்து வந்து கைது செய்தது சட்டவிரோதமானது"
"தமிழக காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்"
"தெலுங்கில் எழுதி கையெழுத்து வாங்கியுள்ளனர்"
"எஸ்.பி. முன்னிலையிலேயே நடந்தது வேதனை"
"சில அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்பட்டுள்ளனர்"
"முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்"
மேலும் பேசிய அவர், கடத்தல் வழக்காக பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கூறியதுடன், இந்த சம்பவத்தை கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையை கண்டித்தும் வரும் 26ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் டில்லிபாபு கூறினார்.