பிரதமர் மோடி- இலங்கை அதிபர் ரணில் விவாதத்தில் என்ன நடந்தது? முக்கிய ஒப்பந்தங்கள் என்னென்ன..?
இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இரண்டாம் நாளான நேற்று, பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்படி, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும்...
நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இலங்கையிடையே பெட்ரோலியம் பைப்புகளை பதிப்பது தொடர்பாகவும்... இலங்கையில் யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களும் இதில் கையெழுத்தாகியுள்ளன. இருநாடுகள் இடையேயான கடல்வழி மற்றும் வான்வெளி போக்குவரத்தை மேம்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மீனவ விவகாரத்தை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வேண்டும் என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது, பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு உதவிய இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை அதிபர் ரணில் கூறினார். முன்னதாக இலங்கை அதிபர் மற்றும் இந்திய பிரதமரிடையான சந்திப்பின் எதிரொலியாக தமிழக மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது, இலங்கை நீதிமன்றம்.
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த மாத 9-ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகு மற்றும் 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. அவர்கள் 15 பேரையும் நிபந்தனைகளுடன் இலங்கை ஊர் காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை வாழும் தமிழர்களின் நலன் குறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் இடையேயான சந்திப்பின்போது இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் மீனவர்களின் நலன் குறித்து விவாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.