கடலில் தவறி விழுந்த மீனவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி | Mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார். வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், நேற்று மாலை 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்துக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பியபோது, பூம்புகார் கடலில் காவிரி சங்கமிக்கும் முகத்துவாரத்தில், அலையின் சீற்றம் அதிகரித்தது. இதில் படகை ஓட்டி வந்த ராஜ்குமார் என்பவர், கடலில் தவறி விழுந்து மாயமானார். மீனவர்கள் படகுகள் மூலம் ராஜ்குமாரை தேடிய நிலையில், இறந்த நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.