பல்லடத்தை அடுத்த இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில், பாட்டிலுக்கு முப்பது ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார் எழுந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு கடை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும், உரிய ஆதாரங்களுடன் டாஸ்மாக் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்படும் என விவசாய சங்கத்தினர் கூறினர். இதையடுத்து, இடுவாயில் வியாழக்கிழமை முதல், அந்த மதுபானக் கடையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது வழங்கி மது பாட்டில்களை செய்து வருகின்றனர். கடை தொடங்கிய நாளில் இருந்து ரசீது போட்டு மது பாட்டில் விற்பனை செய்வது இதுவே முதல் முறை என அப்பகுதி மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதே நடைமுறையை அனைத்து மதுபானக் கடைகளிலும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.