"இந்தி எதிர்ப்பு போரால் திமுக அரசு வீழ்ச்சி அடையும்" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
இந்தி எதிர்ப்புப் போர்தான் திமுக அரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கப்போகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1986-இல், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இரண்டாம் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிய திமுக அரசு, இந்தியை ஏன் கட்டாயப் பாடமாக வைத்திருந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். திமுக அரசின் இருமொழிக் கொள்கை என்பது, ஆங்கிலம் கட்டாயம், தமிழ் கட்டாயமில்லை என்ற அளவில் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால்தான் கல்லூரி படிப்பு வரை தமிழே படிக்காமல், படிக்கக் கூடிய வாய்ப்பை தமிழ்நாட்டில், உருவாக்கி இருக்கிறீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.1962-ஆம் ஆண்டு முதல் இருக்கும் திமுக, பள்ளிக்கல்வியில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கிவிட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 1967-இல், திமுகவை அரியணை ஏற்றிய இந்தி எதிர்ப்பு போர்தான், திமுகவின் வீழ்ச்சிக்கும் காரணமாகப் போகிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.