முதல் கூட்டத்திலேயே அதிருப்தி...'ட்விஸ்ட்' வைத்த கெஜ்ரிவால் நாடே எதிர்பார்த்த பாட்னா மீட் - நடந்தது என்ன?

Update: 2023-06-24 06:45 GMT

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என எதிர்க்கட்சிகள் சூளுரைத்துள்ளன. கூட்டத்தில் நடந்தவையை விவரிக்கிறது இந்த தொகுப்பு

நாடே எதிர்பார்த்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்தது.

தலைவர்களை வரவேற்ற நிதிஷ் குமார், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒன்றுபடுவது அவசியம் என்றார்.... ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என சொன்ன ராகுல் காந்தியும், எதிர்க்கட்சி தலைவர்கள் தெளிவான இதயத்துடன் ஒன்றுபட வேண்டும். எல்லாவற்றையும் நேருக்கு நேர் தெரியப்படுத்தி சரிசெய்ய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், அகிலேஷ் யாதவ், சித்தாராம் யெச்சூரி உள்பட 17 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்ற கோஷத்துடன் எதிர்க்கட்சிகள் கூடிய இந்த கூட்டம், அதற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட தலைவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அப்போது டெல்லி நிர்வாக மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்பது தொடர்பாக காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் தலையிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்திருக்கிறார்கள். மாநிலங்களவையில் டெல்லி நிர்வாக மசோதாவை தோற்கடிக்க ஆதரவளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கைக்கு செவி சாய்க்குமாறு காங்கிரசை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது உங்கள் நிலைபாடு என்னவாக இருந்தது என கெஜ்ரிவாலை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சீண்டியிருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன...

இப்படியாக ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்த சூழலில், 2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை அஜண்டாவை தலைவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். இதற்காக ஒரு பொதுவான திட்டத்தை வகுக்க வேண்டும், ஒரு ஒருங்கிணைப்பாளரை உருவாக்க வேண்டும் எனவும் கட்சிகள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் செயல்பாட்டை மம்தா பானர்ஜி விமர்சித்ததாக சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரும் பரந்த மனதை கொண்டிருக்க வேண்டும், தங்களுக்குள் சண்டை போட்டால் பாஜகவுக்கே லாபம் என மம்தா சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டம் முடிந்ததும் இரண்டாவது சுற்று கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்வது குறித்து ஆலோசித்ததாகவும், கூட்டம் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் நடைபெற்றது என்றார் நிதிஷ்குமார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொது தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசித்ததாக குறிபிட்டார் கார்கே...

நமக்குள் மன வேற்றுமை இருக்கலாம்... ஆனால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் ராகுல்காந்தி... நாட்டை காப்பாற்ற ஒன்றாக செயல்படுவோம் என்றனர் மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ்.

கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெருவாரியான கட்சிகளும் ஒரே கூற்றை வலியுறுத்த, டெல்லி நிர்வாக சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்..? என கேள்வியை எழுப்பி செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தது ஆம் ஆத்மி... எதிர்க்கட்சிகளின் 2- ஆவது ஆலோசனை கூட்டம் சிம்லாவில் ஜூலை 10 அல்லது 12 ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்