சென்னை To பெங்களூரு.. ரயில்களை உச்சபட்ச வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு
சென்னை - பெங்களூரு இடையே160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்திடம் சமர்பித்துள்ளது
தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் வழித்தடங்களில் உச்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முக்கியமாக வந்தே பாரத் ரயில் இயங்கும் வழித்தடத்தில்160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை, தெற்கு ரயில்வே சமர்பித்துள்ளது. இதேபோல், சென்னை - கூடூர், சென்னை - ரேணிகுண்டா வழித்தடத்திலும் 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான திட்ட அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம் - மங்களூரு வழித்தடத்திலும் 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.