கணவனை பிரிந்து Ex Lover உடன் சென்ற பெண்...காதலி கண்முன்னே பழிதீர்த்த கும்பல் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-02-02 11:39 GMT

சென்னை புழல் அருகே, கணவனை பிரிந்து முன்னாள் காதலனுடன் சென்ற பெண்... இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனை வழிமறித்து, கொடூரமாக வெட்டிக் கொன்று பழிதீர்த்த கும்பல்... நடந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் அசோகர் நகரில் வசித்து வந்தவர் சுதாசந்தர். இவர், ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்டப்படிப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது மனைவி, குழந்தை எனக் கூறி, காதலி ராகவி மற்றும் காதலியின் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, புழல் அருகே வாடகைக்கு குடியேறியுள்ளார் சுதாசந்தர்.வில்லிவாக்கம் சாலையில் ராகவியுடன் பைக்கில் சென்றபோது, ஆட்டோவில் மறைந்திருந்த கும்பல் ஒன்று, சுதாசந்தரை வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஆவடி அடுத்த மோரை அருகே வெள்ளச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராகவி. இவர் பள்ளியில் படிக்கும் போதே, அதே பகுதியை சேர்ந்த சுதாசந்தர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். பின்னர் சுதாசந்தரை திருமணம் செய்து கொள்வதற்காக, ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.இதனை ஏற்றுக்கொள்ளாத ராகவியின் பெற்றோர், மகள் இருக்கும் இடத்தை தேடி அலைந்துள்ளனர். பின்னர் ஒருவழியாக அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்த பெற்றோர், ராகவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு, வசந்த் என்பவருக்கு, ராகவியை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது ராகவிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.திருமணமானது முதலே ராகவிக்கும், வசந்துக்கும் தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில், முன்னாள் காதலனான சுதாசந்தருடன் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார் ராகவி. இதன் விளைவாக, 2 மாதங்களுக்கு முன்பு, கணவரை பிரிந்து, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி சுதாசந்தருடன் குடும்பம் நடத்த சென்றுள்ளார் ராகவி.கடந்த ஒரு மாதமாக புழல் அடுத்த விநாயகபுரத்தில் குடியேறிய ராகவியின் இருப்பிடத்தைக் கண்டறிந்த பெற்றோர், எச்சரித்து விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் கடைவீதிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, மறைந்திருந்த கும்பல் சுதாசந்தரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.கொலையாளிகளைக் கண்டறியும் விதமாக, சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஒவ்வொன்றையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், கொலை செய்துவிட்டு மர்மகும்பல் ஆட்டோவில் தப்பிச் சென்றதால், ஆட்டோ ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆட்டோ ஓட்டுநர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றியவர்கள் யார் என்பது வெளிச்சத்திற்கு வரும்...

Tags:    

மேலும் செய்திகள்