அதிமுக ஆட்சியில் வழக்கு..திமுக ஆட்சியில் கைது..! செந்தில் பாலாஜி வழக்கும்..கடந்து வந்த பாதையும்

Update: 2023-06-14 07:18 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான வழக்கின் பின்னணியை இந்த தொகுப்பில் காணலாம்....

முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். கடந்த 2014ம் ஆண்டு போக்குவரத்து துறையில் ஓட்டுனர், நடத்துனர், பொறியாளர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது‌.

இதில் 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு தேவ சகாயம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில, சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது பெயரை சேர்க்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதன் பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 40 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

இந்த விசாரணை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி அவ்வப்போது ஆஜராகி வந்தார். சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் இதில் தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், சென்னை மத்திய குற்ற பிரிவின் வழக்கை ரத்து செய்யவும், அமலாக்க துறையின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய குற்ற பிரிவின் வழக்கை ரத்து செய்ததோடு அல்லாமல் அமலாக்க துறையின் விசாரணைக்கும் தடை விதித்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு, அமலாக்க துறையின் விசாரணைக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 26 ஆம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் கரூரில் உள்ள வீடுகளிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சரின் அலுவலக அறைகளிலும் சோதனை நடத்தினர்.

சுமார் பதினேழு மணி நேர விசாரணைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர். தற்போது உடல்நலக்குறைவால் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்