திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க 1000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிராக உழவர்கள் போராட்டங்களை நடத்தியதை அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், செய்யாறு பகுதியில் 2700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை கையகப்படுத்த முயல்வது சரியல்ல என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும், செய்யார் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்து உழவர்களின் வாழ்க்கையில் அரசு விளக்கேற்ற வேண்டும் எனவும், அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.