"போலீஸ் ஸ்டேஷனில் ஒரு திருடர்ர்ர்.." - வாகனங்களை அபேஸ் செய்த 'உத்தமர்' - கேடி SI சிக்கியது எப்படி?
வழக்கில் சிக்கும் வாகனங்கள், ஒன்று, காவல்நிலையத்தில் துருப்பிடித்து எலும்பும் தோலுமாக நிற்கும்... அல்லது... ஒருவேளை உரிமையாளரிடம் அந்த வாகனம் ஒப்படைக்கப்படுமானால்... விவேக் பட காமெடியில் வருவது போல... Body மட்டும் மிஞ்சும், Parts-கள் மாயமாகி இருக்கும்... ஆனால், இந்த இரண்டுமே இல்லாமல், காவலரே வாகனத்தை அபேஸ் செய்தால்... அப்படி ஒரு சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது...
செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன் எண்டத்தூர் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு, மதுராந்தகம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். முதுகரை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த வாகனத்துடன் மோதி, அவரது வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், எதிரே வந்த வாகனத்தில் பயணித்த நபர், படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவபாலனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து சித்தாமூர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், 25 ஆயிரம் ரூபாய் கட்டிய சிவபாலன், பிணையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சிவபாலன் காவல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று, தனது வாகனத்தை ஒப்படைக்கும்படி பலமுறை கேட்டுள்ளார். ஆனால், சித்தாமூர் காவல்நிலையத்தில் காவலராக இருந்த பக்தவச்சலம் என்பவர், ஏற்கனவே வேறொரு இடத்தில் விபத்துக்குள்ளான வாகனத்தை காண்பித்து, சிவபாலன் வாகனத்தில் உள்ள பதிவெண்ணை, அந்த இருசக்கர வாகனத்தில் பொருத்தி இதுதான் உன் வாகனம் எனக் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், காவலர் பக்தவச்சலத்தின் வாகனத்தை பார்த்த சிவபாலன், நமது வாகனம் போலவே உள்ளதாக சந்தேகம் அடைந்துள்ளார். பின்னர், அது தன்னுடைய வாகனம்தான் என உறுதிப்படுத்திய சிவபாலன், இதுகுறித்த தகவலை சமூகவலைதளத்தில் பதிவிட, அது வைரலாகியது. இந்த விவகாரம், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
மேலும், காவலர் பக்தவச்சலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சித்தாமூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்தது தெரியவந்தது. கள்ளச்சாராய வியாபாரிகளிடம் வாரந்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.அதன் பிறகு, சித்தாமூர் தனிப்பிரிவு காவலர் பக்தவச்சலத்தை பணியிடை நீக்கம் செய்து, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உத்தரவிட்டது.ஆனால், தன் மீது நடவடிக்கை எடுப்பதை அறிந்த பக்தவச்சலம், அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், திடீரென நெஞ்சுவலி என மருத்துவ விடுப்பில் சென்றார்... வழக்கில் சிக்கிய வாகனத்தை, காவலரே தனது சொந்த வாகனம் போல, கோல் மால் செய்து அபகரித்தது, பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது