வெளிநாட்டு பானத்திற்கு அசராத தமிழர் பானம்... வேலூரில் பிறந்து உலகின் உச்சம் தொட்டது..!
தமிழ்நாட்டில் 1980-களில் குளிர்பானம் என்றதும் நினைவுக்கு வருவது கோலி சோடாதான். அன்றைய
நாளில் அனைவரும் விரும்பி பருகிய ஒரே புத்துணர்ச்சி பாணம்....வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளிகளை வரவேற்று அன்பை வெளிப்படுத்தும் அமுத பாணமாக அறியப்பட்டது.
அதன் பின்னர், விதவிதமாய், பல்வேறு சுவைகளில் அழகிய பாட்டில்களில் அடைக்கப்பட்டு வந்த வெளிநாட்டு குளிர்பாணங்கள், பாரம்பரிய கோலி சோடாவை ஓரம்கட்ட தொடங்கின.
ஆனாலும் தனக்கே உரித்தான தனித்த அடையாளத்துடன் எங்கோ ஒரு மூலையில் உயிர்ப்போடு இருந்துவந்த கோலி சோடா, சமீப காலமாக மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
ரசாயனங்கள் மிகுந்த வெளிநாட்டு குளிர்பானங்கள் மெல்ல மெல்ல செல்வாக்கை இழந்துவர, தன் பாரம்பரிய தனித்துவத்தால் மீண்டும் கோலிசோடாவுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
தமிழகத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமான வேலூரில் தான் சூட்டை தனிக்கும் முதல் கோலி சோடாவும் தயாரிக்கப்பட்டது. வேலூரை சேர்ந்த கண்ணுசாமி முதலியார் என்பவர் தான் முதல் கோலிசோடா கம்பெணியை 1924-ல் தொடங்கினார். இதற்காகவே, இன்று பிரபலமாக அறியப்பட்டும் பச்சை வண்ண கோலி சோடா பாட்டில்களை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தாராம்!
மெல்ல மெல்ல, வட மாவட்டங்கள் முழுவதும் இவர்கள் கோலிசோடா கோலோச்ச தொடங்கியது. அன்றைய காலகட்டத்தில் சென்னை- பெங்களூர் சாலையில் பயணம் செய்பவர்கள், தங்கள் களைப்பையும், உடல் சூட்டையும் தணிக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது இந்த கோலி சோடா என்றால் மிகையல்ல...
இது குறித்து வாடிக்கையாளர் மதன் கூறுகையில், அந்த காலத்து பாட்டி வைத்தியம் போல, உடல் சூட்டை குறைக்கவும், வயிறு தொடர்பான உபாதைகளுக்கும், தான் இதை பல ஆண்டுகளாக பருகி வருவதாக தெரிவிக்கிறார்.