கூலி வேலை செய்துகொண்டே 'டாக்டர்'... சாதிக்க துடிப்பவர்களுக்கு ரியல் ரோல்மாடல் - சாதனை பெண்மணி பாரதியின் கதை..!
கூலி வேலை செய்துகொண்டே முனைவர் பட்டம் பெற்ற பெண்ணின் வாழ்க்கை கதையை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு..
பார்ப்பதற்கு மெலிந்த தேகம், அழுக்கு படிந்த ஆடை, கூலி வேலை செய்து காய்ச்சுப் போன கைகள்.. இவை தான் சாதனை பெண்மணி பாரதியின் அடையாளங்கள்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நாகுலகுடம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சாகே பாரதி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.
ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். தனது கிராமத்தின் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை பயின்ற நிலையில், மேற்படிப்பை தொடர குடும்ப சூழ்நிலை இடம் தராத நிலையில், தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
வறுமையில் வாடிய இந்த தம்பதி, தினசரி கூலி வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும், படிப்பின் மீது தீரா காதல் கொண்ட பாரதி தனது ஆசையை கணவர் சிவபிரகாசிடம் தெரிவிக்க, அவரும் பச்சை கொடி காட்டினார்.
கணவரின் ஊக்கத்துடன் கல்லூரியில் சேர்ந்த பாரதி, தினசரி அதிகாலை எழுந்தவுடன் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, 30 கிலோ மீட்டர் தொலைவில்
உள்ள கல்லூரிக்கு சென்று, வேதியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார்..
இந்நிலையில், அவரது கடின உழைப்பையும் விடா முயற்சி யையும் கண்ட ஆசிரியர்கள், அவரை முனைவர் பட்டம் பெற ஊக்குவித்துள்ளனர். அதன் பயனாக, முனைவர் பட்டப்படிப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் பாரதி.
இந்நிலையில், தன்னுடைய கனவு நிறைவேறியது குறித்து பாரதி கூறுகையில், "சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த கல்வி முக்கியமானது என்று தெரிவித்தவர், கல்லூரி பேராசியராக பணியாற்றி, தன்னை போல சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் திகழ்கிறார் ஆந்திராவை சேர்ந்த பாரதி.