34 நிமிடத்தில் 76 செய்திகள்.. | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News |Thanthi Short News (17.05.2023)
16 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அருண் தம்புராஜ் ஐஏஎஸ் கடலூர் மாவட்ட ஆட்சியராகவும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனிமேரி ஸ்வர்ணாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை ஆட்சியராக தீபக் ஜாக்கப்பும், புதுக்கேட்டை ஆட்சியராக மெர்சி ரம்யாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, நடைபாதையை பார்வையிட்ட முதலமைச்சர், ரெங்கநாதன் தெரு வழியாக நடந்து வந்தார். அப்போது, பொதுமக்கள் பலரும் முதலமைச்சருடன் செல்பி எடுத்து கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. பூத் கமிட்டி, 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, மதுரை மாநாட்டிற்கான இடம் தேர்வு, ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.டிடிவி தினகரன்- ஓ. பன்னீர் செல்வம் இடையே சந்திப்பு நடந்துள்ள நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சென்னையில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், இது குறித்து புகார் அளிக்க போன் செய்தால், அதிகாரிகள் எடுப்பதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.