34 நிமிடத்தில் 70 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (09.06.2023)

Update: 2023-06-09 04:04 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கண்ணுத்து கிராமத்தை சேர்ந்த காவியா என்ற 8 வயது சிறுமி, முதல்வரிடம் சென்று, "முதல்வர் அங்கிள்... எனது அப்பா இறந்து விட்டார்... என்னால் படிக்க முடியவில்லை... படிப்பதற்கு உதவி செய்யுங்கள்..." என அழுது கொண்டே கூறியது பலரது மனதையும் உறுக்கியது. இதையடுத்து, படிப்புக்கு உதவி செய்வதாக திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் உறுதி அளித்ததாக சிறுமியின் தாயார் கவிதா தெரிவித்தார்.

 ஆவினில் சிறார்களை பணியில் அமர்த்திய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவினில் சிறார்களை பணியமர்த்தி, ஊதியம் வழங்காமல், போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் திமுக அரசு குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிப்பதாகவும் அறிக்கையில் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இருப்பினும், வெப்பம் தணந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விழுப்புரத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழையால் நிலம் குளிர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்