33 நிமிடத்தில் 64 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (29.05.2023)

Update: 2023-05-29 03:50 GMT

அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 105 புள்ளி 8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 103 புள்ளி 1 டிகிரியும், மீனம்பாக்கத்தில்104 புள்ளி 3 டிகிரியும், கடலூரில் 102 புள்ளி 2 டிகிரியும் வெப்பம் பதிவானது. அதேபோல, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, நாகை, வேலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் வெயில் சதம் அடித்தது. °

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி. எஃப். 12 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய நேரப்படி காலை 10.42 மணிக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டின் மூலம் NVS-01 என்கிற 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் வகை செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நிலம் மற்றும் கடற்பரப்பில் பயணிக்கும் இடம், தொலைவை மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என கூறப்படுகிறது.

டோக்கியோ சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஜப்பான்வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளதாக குறிப்பிட்டார். அயலகத் தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், ஜப்பானிய தமிழ் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் தெரிவித்தார். எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டை மறக்காதீர்கள் என்று வலியுறுத்திய அவர், தமிழ்நாட்டுக்கு வந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்த்து செல்லுமாறு கோரினார்.

சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் அஞ்ச வேண்டாம் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான, நியாயமான விலை வழங்குவதையும், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதையும் இலக்காக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நேரத்தில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கபட்டு விட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்