30 நிமிடத்தில் 61 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (19.05.2023)
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்ப அலை வீசி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்த சித்தராமையா, மற்றும் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதையடுத்து, நாளை 20 தேதி, பகல் 12.30 மணியளவில், பெங்களூரூவில் உள்ள கன்டீவரா அரங்கில் புதிய பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பெங்களூர் செல்ல உள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹிமாச்சல் முதல்வர் சுக்வீந்தர்சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகா முதல்வர் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தை, பிரதமர் நரேந்திர மோடி மே 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்த மக்களவை தலைவர் ஓம்பிர்லா, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க அழைப்பு விடுத்தார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன