29 நிமிடத்தில் 59 செய்திகள்.. | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News |Thanthi Short News (05.06.2023)

Update: 2023-06-05 04:43 GMT

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, 7 இடங்களில் உதவித்தொகை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சோரோ, காரக்பூர், பாலசோர், காந்தபாரா, பத்ரக், கட்டாக், புவனேஸ்வர் ஆகிய 7 இடங்களில் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 285 பேருக்கு 3 கோடியே 22 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை உதவி எண் 139க்கு அழைத்து கேட்டுக்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒடிசாவில் மீட்பு நடவடிக்கைகளை முடித்து சென்னை வந்த அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர், முதலமைச்சர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, விபத்து நடந்த பாலசோரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்பு பணிகள், சிகிச்சை, பயணிகள் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விவரித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில், திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்த போது தமிழக பாஜக அமைதியாக இருந்தது ஏன் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய தினம் அமைதியாக இருந்த தமிழக பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 மதுரை, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் இருந்து வரும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னை வர 3 ஆயிரத்து 629 ரூபாயாக இருந்த கட்டணம் 12 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்