25 நிமிடத்தில் 55 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (02.06.2023)
2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிரான அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள அவசர சட்டம், சட்ட மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் தோற்கடிக்க வேண்டும் என, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மக்களவையில் இந்த மசோதா நிறைவேறினாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அந்த மசோதாவை தோற்கடிக்க முடியும் என்றார்.
மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் வறண்ட பாலைவனம் ஆகாமல் தடுக்க அதிமுக அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும் என எச்சரித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து மத்திய பாஜக அரசு நாடக அரசியல் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா மற்றும் 'விடுதலை' 89-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திராவிட அரசியல் அடையாளத்தை அழிக்க முடியாது என்றும், குப்புற விழுந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் பதிக்க முடியாது என்றும் கூறினார்.