24 நிமிடத்தில் 42 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (12.07.2023)
மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம், விமானம் மற்றும் இயற்கைச் சூழலில் படிப்பது போன்ற அமைப்புகள் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் உரையாடுவது போன்ற 'விர்ச்சுவல் ரியாலிட்டி' அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவை முன்னிட்டு, மதுரை கலைஞர் நூலகத்தை சுற்றிலும் லேசர் ஒளிரும் விளக்குகளாலும், சுற்றுச்சுவர்களில் பல வண்ண அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மின்னொளியில் ஜொலித்த கலைஞர் நூலகத்தை, நேற்று இரவு ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் கண்டு ரசித்து, செல்போனில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பங்கள் பெறுதல் மற்றும் விநியோகம் தொடர்பான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதிவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மண்டலம் முழுவதும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் பெறப்படவுள்ளது. அடுத்தகட்டமாக, செப்டம்பர்18-ஆம் தேதிவரை மண்டலத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு, 30 பேர் கொண்ட குழுக்களாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட பள்ளிகல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தாடை அணிந்து, காமராஜர் படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்றும், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.