தாம்பரம் சர்வீஸ் சாலையில் திடீரென கூடிய 300 மக்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து
தாம்பரம் மாநகராட்சி கன்னடபாளையம் சர்வீஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் குடியிருப்புகள் உள்ள நிலையில், இந்த சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து காவலர்கள் அனுமதித்த நேரம் மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் செல்வதாக கூறப்படுகிறது...
சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள நிலையில், இதுவரை வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை என்று குற்றம் சாற்றப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு கூட பைக்கில் வந்த இளைஞர் பொக்லைன் எந்திரத்தில் சிக்கி பலியான நிலையில், பள்ளி நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தை அந்த பகுதியில் சென்ற ஏராளமானவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 24 மணி நேரமும் இப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் பொதுமக்கள் எப்போதும் உயிர் பயத்துடனே பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கன்னடபாளையம் தர்காஸ் சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.