20க்கும் மேற்பட்ட கொலைகள் -பிகினி கில்லரை விரட்டி விரட்டி பிடித்த காவல்துறை-விடுதலை செய்த நீதிமன்றம்
20க்கும் மேற்பட்டோரைக் கொலை செய்த சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ்-ஐ நேபாள நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1944ல் வியட்நாமில் பிறந்த சோப்ராஜின் தந்தை ஒரு இந்தியர் மற்றும் தாய் வியட்நாமைச் சேர்ந்தவர். இளம் வயதில் பிரான்ஸ் சென்று அந்நாட்டின் குடியுரிமை பெற்ற சோப்ராஜ், துவக்கத்தில் சிறிய சிறிய குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், 1970களில் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து கொலை செய்யும் அளவுக்கு துணிந்தார்... முதன்முதலில் சோப்ராஜ், பிகினி உடை அணிந்திருந்த தாய்லாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாபயணியைக் கொன்றதால், அன்று முதல் அவர், பிகினி கில்லர் என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து இது போல் பல சுற்றுலாப்பயணிகளைக் கொலை செய்து அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் பணத்தைப் பறித்து கொண்டு வெளிநாட்டிற்கு பயணம் செய்து அங்கும் பல கொலைகளை சோப்ராஜ் அரங்கேற்றி வந்தார். பல நாள் தேடலுக்குப் பிறகு இந்தியாவில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இங்கிருந்து தப்பி கோவா சென்ற நிலையில், அங்கும் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். இந்தியாவில் தண்டனை முடிவடைந்த பிறகு நேபாள நாட்டில் நிகழ்த்திய கொலைக்காக 2004ல் அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையில் 19 ஆண்டுகள் மட்டுமே சோப்ராஜ் அனுபவித்துள்ள நிலையில், இதய பாதிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோப்ராஜை விடுதலை செய்துள்ள நேபாள நீதிமன்றம், அடுத்த 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.