காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கர்நாடக மக்களுக்கு தனது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக அனுப்பியுள்ள தகவலில், கர்நாடகாவின் நற்பெயர், ஆளுமை மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் யாரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த பதிவு பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும், இறையாண்மை என்பது ஒரு தனி நாட்டை குறிக்கும் என்றும், ஆனால் கர்நாடகாவில் அதுபோன்று எந்த விஷயங்களும் இல்லாத சூழலில் சோனியா காந்தி, மக்களிடையே பிரிவினை வாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.