உலகின் பிபியை எகிற வைத்துள்ள ஒற்றை பலூன் சீனாவுடன் போருக்கு தயாராகும் அமெரிக்கா..? உளவு பலூன்கள் என்றால் என்ன..?

Update: 2023-02-06 02:23 GMT

ஒரு நாடு இன்னொரு நாட்டை உளவு பார்ப்பது ஒன்றும் புதிதல்ல... உளவு பார்ப்பதில் கூட வெளிப்படை தன்மையோடு நடந்து கொண்ட நாடுகள் உண்டு என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

அமெரிக்காவின் வான்பரப்பில் ஆயுதம் ஏந்தாத ரஷ்யாவின் உளவு விமானங்களும்... ரஷ்யாவின் வான்பரப்பில் ஆயுதம் ஏந்தாத அமெரிக்காவின் உளவு விமானங்களும் பரப்பதற்காக கையில் எடுக்கப்பட்ட திட்டம் தான் Open skies ஒப்பந்தம்.

1955 ஆம் ஆண்டே முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம் 47 ஆண்டுகளுக்கு பிறகு தான் செயல்பாட்டிற்கு வந்தது.

அப்படி 2002 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ரஷ்யா மீது 196 அமெரிக்க உளவு விமானங்களும்... அமெரிக்கா மீது 71 ரஷ்ய விமானங்களும் பறந்து.. தகவல் களை சேகரித்து வந்தன.

ஆனால் அதன் பிறகு இந்த ஒப்பந்தம் முறித்து கொள்ளப்பட்டது... தொழில்நுட்பம் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் செயற்கை கோள்களே உளவு பார்க்க பயன்படுத்துகின்றன, இன்னும் ஒரு படி மேலே போய் உளவு பலூன்களை பயன்படுத்தி வருகின்றன உலக நாடுகள்.

அமெரிக்காவை பொறுத்தவரை சென்ற ஆண்டு ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு ஒதுக்கிய நிதியில் உளவு பலூன்களுக்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

செயற்கைகோள் கொண்டு உளவு பார்ப்பதை விட பலூன்கள் கொண்டு உளவு பார்ப்பதால் செலவு குறைவு என்பதே இதற்கு காரணம்.

அதுமட்டுமல்ல பலூன்களால் ஒரே இடத்தில் வெகு நேரம் நிலையாக நின்று பல தகவல்களை சேகரிக்க முடியும் என்பதாலும் நவீன காலத்தில் கண்ணுக்கு புலப்படாமல் உளவு பார்க்க கூடிய பல தொழில்நுட்பங்கள் வந்தாலும்... உளவு பலூன்களின் செயல்பாடுகள் ஓரங்கட்டப்படவில்லை.

பிரெஞ்சு புரட்சி போரின் போதும் சரி... அமெரிக்க உள்நாட்டு போரின் போதும் சரி.... 1790களிலேயே பலூன்களை உளவு பார்க்க பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன உலக நாடுகள்.

முதலாம் உலக போரின் போதும்... அமெரிக்க -ரஷ்ய பனிப்போரின் போதும் சீனா மற்றும் ரஷ்யா மீது நூற்றுக்கணக்கான உளவு பலூன்களை பறக்கவிட்டிருந்தது அமெரிக்கா.

இரண்டாம் உலக போரின் போது அமெரிக்காவிற்கு வெடிகுண்டுடன் கூடிய சுமார் 9 ஆயிரம் பலூன்களை அனுப்பி வைத்தது, ஜப்பான்.

ஏன்... அண்மையில் ஆப்கானிஸ்தான் போரின் போது அகச்சிவப்பு மற்றும் வண்ண வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு உளவு பார்த்திருந்தது, அமெரிக்கா.

2004 ஆம் ஆண்டு ஈராக்கிலும்... தனது நாட்டின்

தெற்கு எல்லையோர பாதுகாப்பிற்கும்.. பலூன்களை பறக்கவிட்டே உளவு பார்த்து வந்தது அமெரிக்கா.

இந்த நிலையில் தான்... அணு ஆயுத தளங்கள் மற்றும் விமான தளங்கள் கொண்ட தங்கள் நாட்டின் வடமேற்கு பகுதியில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்தது... அமெரிக்காவை கொந்தளிக்க வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்