இந்தியாவுக்கு முடிவுரை எழுதிய ரோகித் எடுத்த ஒரு தவறான முடிவு

Update: 2024-10-21 04:57 GMT

இந்தியாவுக்கு முடிவுரை எழுதிய ரோகித் எடுத்த ஒரு தவறான முடிவு

நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் இங்கிலாந்திடம் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன்பின் சொந்த மண்ணில் தற்போது நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2ம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

மேகம் சூழ்ந்த ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்காமல் ரோகித் எடுத்த முடிவு இந்திய அணிக்கு பெரும் பாதகமானது.

முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி சொந்த மண்ணில் இந்தியா அவச்சாதனை படைத்தது. 5 இந்திய பேட்டர்கள் டக்-அவுட் ஆகினர். முதல் இன்னிங்ஸில் முற்றிலும் சறுக்கியதுதான் இந்தியாவின் தோல்விக்கு அடித்தளமாகவும் அமைந்தது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தின் ஃபீல்டிங் வியக்க வைத்தது. நியூசிலாந்து வீரர்கள் களத்தில் பாய்ந்தனர். ஆனால் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் பெரிதாக பிரகாசிக்கவில்லை. சுலபமான கேட்ச்சைக் கூட கோட்டைவிட்டனர்.

நியூசிலாந்தின் முதல் இன்னிங்சில் டெய்ல் என்டரான (tail ender) சவுதி அரைசதம் அடித்தார். ரச்சினுடன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு சவுதி சேர்த்த 137 ரன்கள் இந்தியாவிற்கு பின்னடைவைத் தந்தது.

2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் சிரத்தையுடன் விளையாடி ரன் சேர்த்தனர். சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பண்ட் இணை ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது.

என்றாலும் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு பழையபடி நியூசிலாந்து வசம் ஆட்டம் சென்றது. 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த இந்தியா, மேலும் 54 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஆல்-அவுட் ஆனது.

நியூசிலாந்து அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடியது. இந்திய அணியிலோ பும்ரா, சிராஜ் ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர்.

சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் பெரிதாக ஒத்துழைக்காத நிலையில் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக ஸ்பின்னரான குல்தீப் யாதவை தேர்வு செய்தது, சரியான முடிவுகளைத் தரவில்லை...

கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் களமிறங்கியதும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்