பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில், 255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 10 இடங்களில் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. அதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ- இன்சாப் கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே, தேர்தலில் வெற்றி பெற்ற 3 சுயேட்சை வேட்பாளர்கள் நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான்கான் கட்சி ஆட்சி அமைப்பதை தடுக்கும் விதமாக, நவாஸ் ஷெரீப் கட்சியும், பிலாவல் பூட்டோவின் கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.