ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு ஜப்பான் நாட்டின் தூதர் அசத்தலாக ஆடிய நடன வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில், 'ஜெயிலர்' திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் உருவான காவாலா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல், கடந்த மாதம் 8-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல பெரும் வரவேற்பை பெற்றது. அதில் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில், 10 மாத குழந்தை தொடங்கி
80 வயது தாத்தா, பாட்டி வரை இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோக்கள் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில், பட்டிதொட்டி எங்கும் பட்டய கிளப்பும் காவாலா பாடல், ஜப்பான் ரசிகர்களையும் விட்டுவைக்க வில்லை. சமீபத்தில், ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் காவாலா பாடலுக்கு ஆடிய கலக்கல் நடனமும் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பானில் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் சூழலில், இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி, காவாலா பாட்டுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.