"சுதந்திர பாலஸ்தீன் மட்டுமே தீர்வு... ஹமாஸுக்கு அழைப்பு விடுத்த ஐ.நா." - பேரதிர்ச்சியில் இஸ்ரேல்..!
இஸ்ரேல் - பாலஸ்தீன போரில், சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்காமல் தீர்வு சாத்தியமில்லை என ஐநா தலைவர் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் கெய்ரோவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஷோக்ரியை சந்தித்தபோது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், இஸ்ரேலுக்கும் ஹமாசிற்கும் இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது, மோதலை தணிப்பதற்கான வழி மற்றும் காசாவுக்கு மனிதாபிமான உதவிக்கான ஏற்பாடு குறித்து இருவரும் விவாதித்தனர். தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குட்டெரஸ் வலியுறுத்தினார். பணயக்கைதிகளை உடனடியாக, நிபந்தனையின்றி விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அழைப்பு விடுத்த அவர், மனிதாபிமான உதவிகளை உடனடியாக, தடையின்றி காசாவிற்குள் நுழைய அனுமதிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தினார். எகிப்தின் எல் அரிஷ் விமான நிலையம் மற்றும் ரஃபா கிராசிங்கை தங்கள் ஒரே நம்பிக்கை என்று குறிப்பிட்ட அவர், இவைதான் காசா மக்களின் உயிர் நாடிகள் என குறிப்பிட்டார். சுதந்திரமான பாலஸ்தீன அரசை உருவாக்காமல் எந்தத் தீர்வும் சாத்தியமில்லை என அவர் வலியுறுத்தினார்.