உலகையே கட்டி ஆள துடிக்கும் அமெரிக்காவின் கருப்பு பக்கங்கள்...சுக்குநூறாக உடையும் வல்லரசு பிம்பம்

Update: 2024-07-15 05:35 GMT

உலகையே கட்டி ஆள துடிக்கும்

அமெரிக்காவின் கருப்பு பக்கங்கள்

சுக்குநூறாக உடையும் வல்லரசு பிம்பம்

ஒரு குட்டி நாட்டில் கூட இப்படி நடக்காது

முன்னாள் அமெரிக்க அதிபரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில், இதற்கு முன் படுகொலை செய்யப்பட்ட, மற்றும் படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்த அமெரிக்க அதிபர்கள், வேட்பாளர்கள் யார் யார் என பார்க்கலாம்...

நெருங்கி வரும் அதிபர் தேர்தலுக்காக அமெரிக்கா பரபரப்பாக தன்னைத் தயார் படுத்திக் கொண்டுள்ள இந்த சமயத்தில் குடியரசுக் கட்சி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை இளைஞர் ஒருவர் படுகொலை செய்ய முயன்ற சம்பவம் தான் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது...

பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார் ட்ரம்ப்...

1776 ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை அமெரிக்க அதிபரோ... முன்னாள் அதிபரோ... அதிபர் வேட்பாளரோ... குறி வைக்கப்படுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல...

கறுப்பின உரிமைகளுக்காக போராடினாரே அமெரிக்காவின் 16வது அதிபர் ஆபிரகாம் லிங்கன்... ஏப்ரல் 14, 1865ல் பொதுவெளியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்... மக்களால் மக்களுக்காக நடத்தபடுவதே மக்களாட்சி என்பதைக் கூறியவரும் இவரே... ஆனால் கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்...

ஜேம்ஸ் கார்பீல்ட் தான் அமெரிக்க வரலாற்றில் படுகொலை செய்யப்பட்ட 2வது ஜனாதிபதி... ஜூலை 2, 1881ல் வாஷிங்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றின் வழியே நடந்து சென்று ​​நியூ இங்கிலாந்துக்கு செல்லும் ரயிலைப் பிடிக்க முயன்ற போது மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்...

1901 செப்டம்பர் 6 அன்று நியூயார்க்கில் உரை நிகழ்த்தினார் அமெரிக்காவின் 25வது அதிபர் வில்லியம் மெக்கின்லி... தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த சமயத்தில் மார்பில் 2 முறை துப்பாக்கியால் சுடப்பட்டார்... படுகாயமடைந்த அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்று அனைவரும் காத்திருக்க... 8 நாள்களில் அவர் உயிர் பிரிந்தார்...

அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் படுகொலைகளில் ஒன்றாகக் கருதப்படுவது அமெரிக்காவின் 35வது அதிபரான ஜான் எஃப் கென்னடியின் படுகொலை... மனைவி ஜாக்குலினுடன் 1963 நவம்பரில் டல்லாஸ் சென்றார் கென்னடி... காரில் மெதுவாக பயணித்தபடியே மக்களை நோக்கி கையசைத்துக் கொண்டிருந்தார்... அப்போது தான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது... மின்னல் வேகத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் கென்னடியின் உயிரைக் குடித்தன...

படுகொலை செய்யப்பட்ட ஜான் எஃப் கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவரும் 1968ல் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்...

டிரம்பைப் போலவே, அமெரிக்காவின் 26வது அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட், 1912ல் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட போது விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் சுடப்பட்டார்... பேசுவதற்காக அவர் குறிப்பெழுதி வைத்திருந்த 50 பக்க காகிதங்களும், கண் கண்ணாடிக்கான இரும்பு கேசுமே உயிரைக் காத்தது... இரண்டும் துப்பாக்கி குண்டின் வேகத்தைக் குறைத்தது... இருந்த போதும் ரூஸ்வெல்ட்டின் நெஞ்சைப் பதம் பார்த்த குண்டு அவர் உயிர் வாழும் வரையில் நெஞ்சிலேயே இருந்தது...

அமெரிக்காவின் 32வது அதிபரான ஃப்ரான்க்ளின் ரூஸ்வெல்ட், 1933ல் மியாமியில் படுகொலை முயற்சிக்கு ஆளானார்... அவர் தப்பிய போதும், சிகாகோ மேயரான அன்டன் செர்மாக் கொல்லப்பட்டார்...

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகக் களமிறங்கிய ஜார்ஜ் வாலஸ், 1972ல் பிரச்சாரத்தின் போது மேரிலாந்தில் 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டார்...

​​

38 வது அமெரிக்க அதிபராக இருந்த ஜெரால்ட் ஃபோர்டு, 1975 ஆம் ஆண்டில் அடுத்தடுத்த வாரங்களுக்குள் 2 படுகொலை முயற்சிகளில் இருந்து நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்... கலிபோர்னியாவில் ஒரு கூட்டத்திற்கு சென்ற போதும்... மற்றும் 17 நாள்கள் கழித்து சான் பிரான்சிஸ்கோவில் ஒரு ஓட்டலுக்கு வெளியிலும் 2 பெண்கள் அவரைக் கொல்ல முயற்சித்தனர்... இதில் மிகப்பெரிய விஷயமே 2 சம்பவங்களிலுமே அவர் காயம் கூட அடையாதது தான்...

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் அமெரிக்காவின் 40வது அதிபருமான ரொனால்டு ரீகன்... 1981ல் வாஷிங்டன் டிசியில் ஒரு உரையை முடித்து விட்டு வாகன அணிவகுப்பிற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார்...

அமெரிக்காவின் 42வது அதிபராக இருந்த பில் கிளின்டன் வெள்ளை மாளிகைக்குள் இருந்த போது 1994ம் ஆண்டு கட்டடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் கிளிண்டன் காயமின்றி தப்பினார்...

அமெரிக்காவின் 43வது அதிபராக இருந்த ஜார்ஜ் W புஷ்... 2005ல் திபிலிசியில் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாகாஷ்விலியுடன் ஒரு பேரணியில் கலந்து கொண்டார்... அப்போது அவர் மீது கையெறி குண்டு வீசப்பட்டது... ஆனால் வெடிகுண்டும் வெடிக்கவில்லை... யாருக்கும் காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்