பறவையை வேட்டையாடிய ஆமை - அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்
சீசெல்சு நாட்டில் உள்ள ஃப்ரிகெட் தீவில், ராட்சத ஆமை ஒன்று காட்டில் பறவையைத் தாக்கி உண்ணும் காட்சி வெளியாகியுள்ளது
சீசெல்சு நாட்டில் உள்ள ஃப்ரிகெட் தீவில், ராட்சத ஆமை ஒன்று காட்டில் பறவையைத் தாக்கி உண்ணும் காட்சி வெளியாகியுள்ளது. தாவர உண்ணியாக கருதப்படும் ராட்சத ஆமையானது, திடீரென்று அதன் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த சிறிய பறவையை வாயில் கவ்வியது. இது தாவரங்களை மட்டுமே உண்ணும் என்று கருதப்படும் நிலையில், பறவையை வேட்டையாடி உண்டது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடமாடும் நவீன திரையரங்கு - பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கு
காசாவில் நவீன நடமாடும் திரையரங்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் அமர்ந்து கார்ட்டூன்கள் உள்ளிட்ட படங்களைக் காண குழந்தைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 60 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் திரையரங்கு காசா சாலைகளில் வலம் வருகிறது.
அர்ஜென்டினாவில் பன்றிப் பண்ணைகள் - சீனாவுடன் ஒப்பந்தம்
அர்ஜென்டினாவில் பன்றிப் பண்ணை அமைக்க சீனாவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பியூனோ ஏர்சில் உள்ள சீன தூதரகம் முன்பாக, மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அர்ஜென்டினாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவுடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அர்ஜென்டின அரசு தயாரான நிலையில், சுற்றுச் சூழல் பாதிப்பு காரணங்களால் ஒப்பந்தம் தாமதமானது. இந்நிலையில், பன்றிப் பண்ணைகளால் காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு ஆகியவை ஏற்படும் என்றும், பன்றிப் பண்ணைக்கு அதிக அளவிலான தண்ணீர், தானியங்கள் ஆகியவை செலவழிக்கப்படும் என்றும் மக்கள் கவலை தெரிவித்தனர்.
அச்சுறுத்தும் கலிபோர்னிய காட்டுத் தீ - தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க திணறல்
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஃபொன்டனா பகுதியில் பரவிய காட்டுத் தீயால், தீப்பிழம்புகளும், புகை மண்டலமும் அப்பகுதியை சூழ்ந்தது. கிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலான நிலையில், அதை ஒரு சதவீதம் கூட கட்டுப்படுத்தமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கும், விலங்குகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தல் - 1.2 டன் எடையுள்ள போதைப்பொருட்கள்
கொலம்பியாவில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற 1200 கிலோ போதைப் பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக கைப்பற்றினர். இராணுவ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் இந்திய மதிப்பு 311 கோடியே 23 லட்சத்து 6 ஆயிரத்து 764 ரூபாய் ஆகும். 2 வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு கொலம்பியர் 1200 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை கொலம்பியாவில் இருந்து மத்திய அமெரிக்கா நோக்கி கடத்த முயன்ற போது, கொலம்பிய அதிகாரிகளிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி - விடுவிக்கக் கோரி போராட்டம்
பொலிவியாவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இடைக்கால ஜனாதிபதியை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீண்ட கால அதிபராக இருந்த இவோ மொராலசை பதவியில் இருந்து நீக்க திட்டம் தீட்டிய குழுவில் இருந்ததாக முன்னாள் பெண் ஜனாதிபதி ஜியானைன் அனெஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஜியானைன் அரசியல் விவகாரங்களில் தான் பலிகடாவாக்கப் பட்டதாகக் கூறினார். சிறையில் அவர் தன் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, அவரை விடுவிக்கக் கோரி ஜியானைன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.