நொடிப்பொழுதில் நரகமாகிய நாகசாகி நகரம் : 76 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கோரம்
76 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் ஜப்பானின் நாகசாகி நகரை நாசமாக்கிய ஒரு கோர நிகழ்வை நினைவு கூரும் தொகுப்பை பார்க்கலாம்...
1939 ஆம் ஆண்டு வெடித்த இரண்டாம் உலகப்போர், 1945 ஆம் ஆண்டில் முடிவை நோக்கி சென்ற நேரம் அது.
ஹிட்லர் தற்கொலை செய்யவும், ஐரோப்பாவில் ஜெர்மன், இத்தாலி படைகள் சரணடைந்தன.
ஆனால் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த துடித்த ஜப்பானின் பேரரசர் மிச்சிநோமியா ஹிரோஹிட்டோவோ, இறுதி வரையில் போரிடுவோம் என முழங்கினார்.
இதனையடுத்து தாக்குதலை தீவிரப்படுத்திய ஜப்பானை சரணடைய செய்ய அமெரிக்கா திணறியது.
மறுபுறம் 1945ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கும் மான்ஹாட்டன் திட்ட வெற்றியடைந்த களிப்பில் இருந்தது அமெரிக்கா.
1930-களில் ஹிட்லர் அணுகுண்டை தயாரிக்கிறார் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கவும், பதிலடிக்கு தயாராக மான்ஹாட்டன் திட்டத்தை அமெரிக்க தொடங்கியது. இறுதியில் ஜப்பான் இலக்கானது.
ஜப்பானை வீழ்த்த ஆலோசனைகளை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரூமன், அந்நாட்டு மீது அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தார்.
அதன்படி, 1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 8.15 மணியளவில் உலகின் முதல் அணுகுண்டை அமெரிக்கா, ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமாவில் வீசியது.
விமானத்தில் இருந்து குண்டு விழுந்த அடுத்த நொடியே சுமார் 5 மைல் சுற்றளவிற்கு உருவாகிய நெருப்புக் கோளம், ஹிரோஷிமாவை கண் மூடி திறப்பதற்குள் தரைமட்டமாக்கியது.
நொடிப்பொழுதில் 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு சில மாதங்களில் மேலும் 50 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் காரணமாக பல மாதங்கள், தொடர்ந்து மக்கள் மாண்டனர்.
ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும் ஜப்பான் சரண் அடைய மறுக்கவும், அமெரிக்கா இரண்டாவது அணு குண்டை ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 11 மணியளவில் நாகசாகி மீது வீசியது.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இங்கும் கதிர்வீச்சு காரணமாக பல மாதங்கள் உயிரிழப்புக்கள் பதிவாகியது.
வாழ்நாளிலும் ஆற்ற, மறவாத சோகங்கள் நிகழ்ந்தேறி இன்றுடன் 76 ஆண்டுகள் ஆகிறது.
2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு, கதிர்வீச்சால் தொடர்ந்து பாதிப்பு அவலத்திற்கு மத்தியில், ஜப்பான் சரணடைந்தது.
இனி எப்போதும் இப்படிப்பட்ட கொடூரத்தை நடக்க விட மாட்டோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்திவரும் மக்கள், அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தங்கள் போராட்டத்தையும் தொடர்ந்து வருகிறார்கள்.