பிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை

கொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2020-04-08 08:38 GMT
ஸ்பெயின் இளவரசி, கனடா அதிபரின் மனைவி என உயர்மட்ட தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனாவுக்கு, தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இலக்காகியுள்ளார்.

மார்ச் 27ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, தீவிர சிகிச்சையில் உள்ளார்.

அவருக்கு பதிலாக, பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தற்போது பிரிட்டன் நிர்வாக பணிகளை கவனித்து வருகிறார். 

போரிஸ் ஜான்சன் பிரிட்டனில், பழமைவாதி என கருதப்பட்டாலும், அந்த நாட்டு நலன்களை முன்னிலைப்படுத்தியதால், மக்களிடம் செல்வாக்கை பெற்றிருந்தவர்.

பிரிட்டனுக்கு மிகப்பரிய பிரச்சினையாக உருவெடுத்த பிரெக்ஸிட் விவகாரத்தில் 2 பிரதமர்கள் பதவியை இழந்த நிலையில் அதை வெற்றிகரமாக நிறைவேற்றிவர் 55 வயதான போரிஸ் ஜான்சன்.

2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற அந்த நாட்டு மக்கள் 51 சதவீதம் பேர் வாக்களித்தனர். 

பிரெக்ஸிட் வெளியேற்றத்துக்கு  பொதுமக்கள் ஆதரவு இருந்தால், பதவி விலகுவேன் என கூறியிருந்த அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன், சொன்னபடி பதவி விலகினார்.
 
அதன் பின்னர் பிரதமரானார் தெரசா மே. அவர் தாக்கல் செய்த பிரெக்ஸிட் வரவு  அறிக்கைகளை அவரது கட்சி உறுப்பினர்களே ஏற்கவில்லை. 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் மசோதா மூன்று முறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மே மாதம்  தெரசா மே பதவி விலகினார்.

அதன்பின்னர் பிரதமரான போரிஸ் ஜான்சன்,  கடந்த  டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் பிரிட்டன் பிரதமரானார்.

இதையடுத்து, தங்களது நெடுநாள் கனவான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் திட்டத்தினை ஜனவரி 31 இரவு  அதிகாரபூர்வமாக பிரிட்டன் நிறைவேற்றியது.

பல தலைவர்களும் பிரெக்ஸிட்டுக்கு எதிரெதிர் நிலையில் இருந்தாலும் அதை சாத்தியாக்கியவர் ஜான்சன்.

தற்போது, கொரோனா தாக்கி தீவிர சிகிச்சையில் இருந்து வரும் அவர் மீண்டு வர வேண்டும் என உலக தலைவர்கள் தங்கள் பிரார்த்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரசா மே, ஜான்சன் நலம்பெற பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில்  தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ராணிக்கு பிரதமர் போரீஸ் ஜான்சன் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படுவதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் சூரியன் மறையாத நாடு என பெயர் பெற்ற பிரிட்டன் தற்போது, முதல்முறையாக பெரும் தவிப்பில் சிக்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்