அதிபர் டிரம்புடன் செய்தியாளர் வாக்குவாதம்
அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் வாக்குவாதம் செய்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு, அடையாள அட்டை பறிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கு தஞ்சம் வருபவர் பற்றி டிரம்பின் விமர்சனம் குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அகோஸ்டா கேள்வி எழுப்பினார்.
மேலும், பரவலாக இனவெறியாக பார்க்கப்படும் குடியேற்ற விளம்பரம் பற்றியும், அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடு தொடர்பான புலனாய்வு பற்றியும் அவர் கேள்வி கேட்டார். அப்போது, இது போதும் என்று கூறிய டிரம்ப் ஒலி வாங்கியை கீழே வைக்க சொன்னார்.
இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை பெண் ஊழியர் ஒருவர் ஒலிவாங்கியை பறிக்க முயன்ற போது அகோஸ்டா அதை தடுத்துள்ளார். இதனை அடுத்து அகோஸ்டா மோசமாக நடந்து கொண்டதாக கூறி, அடுத்த அறிவிப்பு வரும் வரை வெள்ளை மாளிகைக்குள் நுழையும் அனுமதி ரத்து செய்யப்பட்டு, அடையாள அட்டையும் பறிக்கப்பட்டது.