அரசு பேருந்து குறுக்கே வந்து நின்ற தாசில்தார் வாகனம் - அன்று நடந்ததற்கு இன்று பழிவாங்கலா..?
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பேருந்தை வழிமறித்து தாசில்தார் அரசு வாகனத்தை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாச்சலம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராக பணிபுரிந்து வரும் மோகன் என்பவர் மாற்று திறனாளி என்றும், அவர் தென்னூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறும்போது தவறி விழும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தாசில்தார் மோகனுக்கும், பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அந்த பேருந்தை வழிமறித்து தாசில்தார் மோகனின் அரசு வாகனம் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்களும் போக்குவரத்து ஊழியர்களும் தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.