"கஸ்டமர் கேர்-ல இருந்து பேசுது சார்.." - அடுத்த நொடி Gpay ஆன ரூ.88 ஆயிரம்
கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி, 88 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சைபர் குற்றவாளியை ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் சென்று போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பியபோது, பணம் சென்று சேராததால் கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்துப் பேசினார். அந்த எண்ணில் பேசிய நபரிடம், முதியவர் விவரங்களை அளித்த பிறகு, முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து 88 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர், அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜார்கண்ட் மாநிலத்துக்குச் சென்று முகமது பிலால் என்ற இளைஞரை கைது செய்தனர். முகமது பிலால் தனது நண்பர்களுடன் சேர்ந்து போலி வாடிக்கையாளர் சேவை மையம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முகமது பிலால், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.