உருளைக்கிழங்கை கவர்ச்சியாக காட்டி உருட்டி உருட்டி ரூ.3,000 கோடி மோசடி - கிருஷ்ணகிரியில் கதறல்
கிருஷ்ணகிரியில் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனம், 40 ஆயிரம் பேரிடம், மூவாயிரம் கோடி ரூபாய் வரை பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனம் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் 10 மாதங்கள் பங்குதாரர்களுக்கு பணமும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம், சுமார் 40 ஆயிரம் பேரிடம் இருந்து, மூவாயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற பொருளாதார வீழ்ச்சியை காரணம் காட்டி, அந்நிறுவனம் பங்கு தாரர்களுக்கு பணம் வழங்காமல் இருந்தது. தற்போது, யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினர் அனைவரும், தலைமறைவு ஆகியுள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி ஆட்சியரிடமும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடமும் புகார் அளித்துள்ளனர்.