விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்.. நெல்லையில் சக்சஸான எக்ஸ்பிரிமென்ட்
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மனிதனை விண்ணில் செலுத்துவதற்கான ககன்யான் திட்டத்திற்கான மூன்றாம் கட்ட சோதனை நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திலிருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஷ் இன்ஜின், பி.எஸ்.4 இன்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின், பல்வேறு கட்ட சோதனைகளும் நடந்து வருகிறது. அதன்படி ககன்யான் திட்டத்தின் முக்கிய கட்டமான, சிஸ்டம் டெமான்ஸ்ட்ரேஷன் மாடல் இன்ஜினின் மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். திருவனந்தபுரம் திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் காணொளி காட்சி மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியை கண்டனர்.