வேட்டையாட விமானத்தில் வரும் மிருக கேங்... பவாரியாக்களை விஞ்சிய பல்வால்ஸ்- குலைநடுங்க வைத்த `ஆபரேஷன்'

Update: 2024-09-28 17:28 GMT

நாமக்கல் அருகே, ஏடிஎம் கொள்ளையர்களை சேசிங் செய்து பிடித்து போலீசார் அதிரடி காட்டிய சம்பவத்தில், கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டது எவ்வாறு என கொள்ளையர்கள் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

ரன்னிங்..சேஸிங்...என்கவுன்ட்டர் என படத்தில் மட்டுமே பார்த்து வியந்த காட்சிகளை கண்முன் காட்டியது தமிழக காவல்துறை.....

ஆம், கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடித்து விட்டு, தமிழகத்திற்குள் நுழைந்த மேவாட்

கொள்ளை கும்பலை சினிமாவையே மிஞ்சுமளவிற்கு சேஸ் செய்து கொள்ளையர் ஒருவரை என்கவுன்ட்டர் செய்து பிடித்திருந்தனர் தமிழக போலீசார்...

இதில் ஹரியானாவை சேர்ந்த ஜுமாந்தின் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், முகமது ஹஸ்ரு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், தமிழகத்தையே உலுக்கிய கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டது எப்படி என பிடிபட்ட கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வடமாநில கொள்ளையர்கள் இரண்டு பேர் ஹரியானாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்துள்ளனர்...

அப்போது மீனம்பாக்கம் அருகே கொள்ளைக்காக தயார் செய்திருந்த கண்டெய்னர் லாரியில் இருந்த சரக்குகளை இறக்கியுள்ளனர்.

பின்னர் அதே கண்டெய்னர் லாரியில் கேரள மாநிலம் திருச்சூர் நோக்கி புறப்பட்ட கொள்ளையர்கள், தமிழக எல்லையை தாண்டியவுடன் கண்டெய்னருக்குள் காரை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

மீதமுள்ள 3 பேர் காரில் திருச்சூர் சென்றடைய, அங்கு கொள்ளையடிக்க பிரத்யேக திட்டத்தை வகுத்துள்ளனர்...

அதிலும் கூகுள் மேப்-ல் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்களை தேடியுள்ளது தெரியவந்துள்ளது.

பின்னர் திட்டமிட்டப்படி கொள்ளையடித்து விட்டு மீண்டும் தப்பும் போது தான், அதிரடியாக கொள்ளைக் கும்பலை பிடித்தது தமிழக காவல்துறை...

இதுமட்டுமன்றி இந்த கொள்ளை கும்பல், பல மாநிலங்களில் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது. பல இடங்களில் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய கும்பல், ஆந்திரா-தமிழக எல்லை மாவட்டங்களில் கைவரிசை காட்டியுள்ளது...

இதனால் இம்முறை கேரளாவை தேர்ந்தெடுத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றலாம் என திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது கொள்ளை கும்பல்...

அத்துடன் கொள்ளையடித்தவுடன் சென்னை அல்லது பெங்களூர் சென்று விட்டு அங்கு வைத்து பணத்தை பிரித்துக் கொண்டு, கண்டெய்னர் மற்றும் காரில் பயணித்து தப்பித்து விடலாம் என தப்புக் கணக்கு போட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது..

கொள்ளையர்களின் பின்னணியை ஆராய்ந்ததில், கொள்ளை கும்பலை சேர்ந்த ஏழு பேரில் இரண்டு பேர் கிருஷ்ணகிரியில் இதே போன்று வங்கி கொள்ளையடித்த சம்பவத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. மற்ற இரண்டு பேர் மீது ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதேபோன்று வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது மட்டுமன்றி 2022ம் ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதே கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது...

மேலும், கைதான கொள்ளையர்களின் குற்ற பின்னணியை முழுமையாக அறிந்து கொள்ள, அவர்களின் விவரங்களை கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநில காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளதோடு, கொள்ளையர்களின் சொந்த மாநிலமான ஹரியானாவில் உள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்