நாமக்கல் வெள்ளக்காடு பகுதியை சேர்ந்த மஞ்சுளா அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3ம் தேதி, ஆசிரியை மஞ்சுளா, தனது இருசக்கர வாகனத்தில், பள்ளி பாளையத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, ஆலம்பாளையம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், மஞ்சுளாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா, பின்னர் ஈரோடு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர்கள் ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதன் பின்னர் உரிய ஆவணங்களில் கையொப்பம் பெற்று கொண்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் மஞ்சுளாவின் உடலில் இருந்து கல்லீரல், நுரையீரல், இதயம், உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகளைப் பாதுகாப்பாக எடுத்து, தேவைப்படும் பயனாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியை மஞ்சுளாவின் உடலுக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்யமூர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அரசு மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.