மகனை துடிதுடிக்க கொன்று... கடலில் குதித்த தந்தை... சென்னையை உலுக்கிய கோரத்தின் பின்னணி
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து, கடன் தொல்லையால் 8 வயது மகனை கொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயன்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சைதன்யா - வைதேகி தம்பதிக்கு, 2 மகன்கள் உள்ள நிலையில், தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வருகிறார். தாம்பரம் விமானப்படையில் சமையலராக பணியாற்றி வரும் சைதன்யா, கடன் தொல்லையால் சிக்கித் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த அவர், திடீரென தனது 8 வயது மகனை தூக்கிட்டு கொலை செய்துவிட்டு, பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் நடந்த விவரங்களை தனது நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் கூறிவிட்டு, கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதனைத் தொடந்து உடனடியாக அவரது நண்பர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, மெரினா கடற்கரை பணியில் இருந்த சைதன்யாவை போலீசார் பத்திரமாக மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டில் பணத்தை இழந்ததால், அதிக கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு போலீசார் இதுதொடர்பாக சைதன்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.