இளமையை கூட்டும் ஓர் அரிய அமுதம்...கல்வராயன் மலையின் இயற்கை புதையல் - இது கல்வராயன் ரகசியம்!

Update: 2024-07-04 06:01 GMT

இளமையை கூட்டும் ஓர் அரிய அமுதம்

கல்வராயன் மலையின் இயற்கை புதையல்

அமுதத்தை விஷமாக்கும் அரக்க கூட்டம்

கல்வராயன் மலை இந்தியாவிற்குள் வந்தது என்னவோ 1976ல் தான்.. அதுவரை பாளையக்காரர்களின் கைவசம் இருந்த மலையானது இப்போது கள்ளச்சாராய மலை என உருமாறி தன் அடையாளத்தை தொலைத்தது ஏன்..? இதுகுறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்திய வனங்கள்..1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட மலைப்பகுதி தான் இந்த கல்வராயன் மலை...

171 மலைகிராமங்கள்...75ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள்...கிட்டத்தட்ட 44 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் இப்போது உள்ள கல்வராயன் மலையில்...

ஆனால் 1991ல் தான் முதல் தேர்தல்... மலைவாழ் மக்கள் ஜனநாயக ஆட்சிக்குப் பழகத் துவங்கியதும் இதன்பிறகு தான்..

இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டதே... ஆனாலும் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என்று புலம்பித் தவிக்கின்றனர் ஊர் மக்கள்...

வெள்ளி மலை வரையில் தான் போக்குவரத்து வசதி உண்டாம்...அதற்குப் பிறகு பெண்கள், முதியவர்கள், மாணவர்கள், குழந்தைகள் என யாராக இருந்தாலும் நடந்து மட்டுமே வந்து செல்ல முடியும்...

அதிலும் அவசர காலங்களில் அவர்கள் நிலைமை பரிதாபம் தான்... கர்ப்பிணிகளையும், நோயாளிகளையும் டோலி கட்டித் தூக்கியபடி மலையில் இருந்து கீழே செல்லும் அவல நிலை இன்றும் நீடிக்கிறது...

இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயம் மட்டுமே... ஆனால் காப்புக்காடு எனும் பெயரில் சுருக்கப்படுவதால் அதையும் முழுமையாக செய்ய முடியவில்லை என கண்ணீர் வடிக்கின்றனர் ஊர் மக்கள்...

வருவாய்த்துறை சார்ந்த பட்டா இல்லையாம் இவர்களுக்கு... வன உரிமை பட்டாவைத்தான் வைத்திருக்கிறார்கள்...

இந்த வன உரிமை பட்டாவை வைத்துக் கொண்டு கடனுதவியோ, அரசு நலத்திட்டங்களையோ பெற முடியாது...

"கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்" என்பார்கள்.. திருமூலரால் "அமுதம்" என சொல்லப்பட்ட ஆரோக்கியத்திற்கு ஆதாரமான கடுக்காய் இங்கு சர்வ சாதாரணமாக கிடைக்கிறது...ஆனால் அதே கடுக்காய் இங்கு ஒரு சிலரால் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?...

கிணறு வெட்டக்கூட அனுமதி இல்லையாம் இங்கே...விவசாயத்தையும் விருப்பப்படி செய்ய முடியாது...மரவள்ளிக் கிழங்கு மட்டுமே பயிரிட முடியும்... அதைப் பயிரிட்டு விட்டு மிளகு சாகுபடி வேலைக்காக கேரளா, கர்நாடகாவுக்குப் போய் விடுகின்றனர் இவ்வூர் மக்கள்...

அதேநேரம் செம்மரக்கடத்தலில் அடிபடும் தமிழர்கள் பலரும் இந்த மலையை சேர்ந்தவர்கள் தானாம்..

பிறந்த மண்ணிலும் வருமானம் இல்லை...எந்த வாழ்வாதாரமும் இல்லை...ஆனால் வயிறு இருக்கிறதே...நம்பி குடும்பம் இருக்கிறதே...பிழைப்புக்கு என்ன செய்வது?...என்று தெரியாமல் தான் கள்ளச்சாராயத்தை பிழைப்புக்கான வழியாக தேர்வு செய்கிறார்கள்..

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதையும் அவர்கள் வரவேற்றுள்ளனர்..

கல்வி, தார்ச்சாலை, மருத்துவம் என தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கல்வராயன் மலைமீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...

வாழ்வாதாரம் இல்லாத போதுதானே வழிதேடி ஒருசிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர் எனும்போது... இவற்றை செய்தாலே கல்வராயன் மலையில் இருக்கும் பழங்குடியினர் மீதான கறை நீங்கும்..

மேலும் கல்வராயன் மலையை அரசு கையிலெடுத்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தினால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்...தொழில் உருவாகும்போது காலப்போக்கில் கள்ளச்சாராயம் எல்லாம் காணாமல் போய் விடும்...

வனங்கள் சமூக விரோதிகளின் கூடாரங்கள் இல்லை...அவை வன விலங்குகள் மற்றும் பழங்குடி மக்களுக்கானது...

கல்வராயன்மலையின் பழம்பெருமைகளும், வரலாற்றுச் சிறப்புகளும் கள்ளச்சாராயத்திற்குள் மூழ்கடிக்கப்படுவது ஏற்புடையதல்ல...

கல்வராயன் மலை தன் கம்பீரத்தை மீட்டெடுக்க காலம் தான் வழி சொல்ல வேண்டும்...

Tags:    

மேலும் செய்திகள்