"நாட்டில் கலவரங்களை உருவாக்க பல மில்லியன் டாலர் செலவு"- ஆளுநர் ஆர்.என்.ரவி
நாட்டில் கலவரங்களை உருவாக்க பல மில்லியன் டாலர் செலவிடப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
தேச பிரிவினை கொடூரத்தின் நினைவு நாள் என்ற தலைப்பில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அமெரிக்காவில் அமர்ந்துக்கொண்டு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வேலைகளை சிலர் செய்வதாக ஹிண்டன்பர்க் அறிக்கையை மறைமுகமாக சாடினார். நாட்டில் குழப்பத்தையும், கலவரங்களையும் உருவாக்க பல மில்லியன் டாலர் செலவிடப்படுவதாக குறிப்பிட்ட அவர், வாய்ப்பு கிடைத்தால் பிரிவினை சக்திகள் நாட்டை துண்டாடிவிடுவார்கள் எனவும் குற்றம்சாட்டினார். பிரிவினையை தூண்டிய சித்தாந்தங்களில் திராவிடமும் ஒன்று என விமர்சித்த ஆளுநர் ரவி, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதால், தமிழக மீனவர்கள் அண்டை நாட்டு ராணுவத்தால் சுடப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.