தறிகெட்டு ஓடிய அதிவேக கார்... பறிபோன தொழிலாளி உயிர்... பற்றியெரிந்த ஷாக் காட்சி

Update: 2024-07-19 17:39 GMT

வயதின் தீவிரத்தில் பதின் பருவ மாணவர்கள் வாகனங்களை அனுமதியின்றி ஓட்டுவதும், அவர்களின் அஜாக்கிரதையால் அப்பாவிகளின் உயிர்கள் அநியாயமாக பறிபோவதும் சமீபத்தில் அதிகமாகி வருகின்றன.

இப்படி அநியாயமாக ஒரு உயிர் பறிபோன சம்பவம்தான் கோவை பீளமேடு பகுதியில் நடந்துள்ளது.

சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மோகன்ராஜ்.... இவரது 17 வயது மகன் அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதிகாலையில் வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார் அந்த 17 வயது மாணவர்...

காலை நேரம்... வாகனங்கள் அதிகமில்லாத சாலை... வேகத்தைக் கூட்டுவோம் என காரை அதிவேகமாக அவினாசி சாலையில் ஓட்டியுள்ளார், அந்த மாணவர்...

அங்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வடமாநில தொழிலாளி அக்‌ஷய்வேரா போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்.

கண்ணிமைக்கும் நேரம்தான்.... மாணவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோத, அருகில் நின்ற வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சென்டர் மீடியனில் ஏறிய கார், திகுதிகுவென தீப்பிடித்து எரிந்தது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்த மாணவனை காயங்களுடன் மீட்டனர். சிறிது நேரத்தில் கார் தீக்கிரையானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். உயிரிழந்த தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

வயிற்றுப் பிழைப்புக்காக தனது சொந்த ஊரைவிட்டு, இங்கே வந்த வடமாநில தொழிலாளி, மாணவனின் அஜாக்கிரதையால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சூழலில், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் மற்றும் அவரது தந்தை மோகன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வயதின் வேட்கையில் மாணவர்கள் வாகனங்களை இயக்குவதை தடுக்க பெற்றோரின் கண்டிப்பைக் காட்டிலும் விழிப்புணர்வுதான் பிரதான தேவை....

Tags:    

மேலும் செய்திகள்