மருத்துவர்கள்-மாநகர சுகாதாரத்துறை இடையே வெடித்த மோதல் -பறிபோன கர்ப்பிணியின் உயிர்-பரபரப்பில் மதுரை
மதுரையில் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணிப்பெண், மருத்துவரீதியான காரணங்களால், ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்தின்போது உயிரிழந்தார். கர்ப்பிணி பெண் காய்ச்சலால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில், நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என மருத்துவர்களிடம் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் இடையே மோதல்போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில், மாநகராட்சி சுகாதார அலுவலருக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாளை முதல் கோரிக்கை அட்டைகளை அணிந்து மருத்துவர்கள் பணிபுரியவும், நாளை ஒருநாள் அவசரமில்லாத அறுவைசிகிச்சைகளை செய்ய போவதில்லை எனவும் மருத்துவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.