திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த தமிழரசன்-நித்யா தம்பதியின் மூத்த மகள் மிருத்திகா, 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 10 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குணமாகாமல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 4 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கிருத்திகா உயிரிழந்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமா, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மாணவியின் மரணத்துக்கு காரணம் டெங்கு காய்ச்சல் இல்லை என்று கூறிய அவர், மாணவி படித்து வந்த பள்ளியிலும், வசித்து வந்த குடியிருப்பு பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை அடுத்த, தேவனாங்குறிச்சியில் மருத்துவர்கள் காய்ச்சல் முகாம் நடத்தி, யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.