"ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம்"... 500-வது நாள் போராட்டத்தில் மக்கள் முழக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே சுற்று வட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விமான நிலையம் அமைப்பதால் தங்கள் இருப்பிடம், வாழ்வாதாரம் பாதிக்க்கப்படும் என்று கூறி, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், பேரணி, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் என பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்க மாநில அரசு நிர்வாக அனுமதி கொடுத்த பிறகும் அந்த பகுதி மக்கள் மனம் தளராமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் வியாழக்கிழமை 500-ஆவது நாளாக தொடர்ந்தது. அந்த போராட்டத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.