மின் விபத்தில் கைகளை இழந்த சோகம் - செயற்கை கை பொருத்த கோரும் இளைஞர்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில், மின் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் ஒருவர், செயற்கை கை பொருத்த உதவி கோரியுள்ளார்.
சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த மகாராஜ பிள்ளை - உஷா குமாரி தம்பதியின் மூத்த மகன் மதன். 2015ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகே மயிலாடியில், வயர்லெஸ் நெட்ஒர்க் பணியில் ஈடுபட்ட போது, மதன் மீது மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், மதனின் உடல் கருகிய நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிளாஸ்டிக் சர்ஜரி உள்பட 11 அறுவை சிகிச்சை செய்து, இரு கைகளையும் அகற்ற வேண்டிய நிலை உருவானது.
மேலும், கடந்த ஆண்டு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவர் ஒருவரின் அறிவுரை படி, மதனுக்கு செயற்கை கை பொருத்துவது குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அதற்கு 15 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்பதால், தங்களால் இயன்ற உதவி செய்யுமாறு அந்த இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.