துப்பாக்கி முனையில் நகை பறிப்பு - இரவு முழுவதும் தொடர்ந்த தேடுதல் பணி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்த வடமாநில கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில், இந்திராணி என்பவர்அணிந்திருந்த தங்க செயினை பறித்து கொண்டு இரண்டு வடமாநில இளைஞர்கள் தப்பி சென்றுள்ளனர். அப்போது அங்கு பொதுமக்கள் கூடவே, துப்பாக்கியை காட்டி அவர்கள் மிரட்டியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி மற்றும் டிஐஜி சத்திய பிரியா நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசாரின் சோதனையில், கொள்ளையர்கள் விட்டுச்சென்ற துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவு முழுவதும் தேடுதல் பணி நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கடந்த வாரம் ஒரகடத்தில் நடந்த டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அங்குள்ள பென்னலூர் ஏரியில் கொள்ளையர்கள் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் பேரில், ஏரியை போலீசார் சுற்றி வளைத்துள்ளதுடன், அனைத்து சோதனைச்சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.