பேனர் வைக்க முழு தடை வேண்டும் - உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்ய உரிய விதிகளை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்ய உரிய விதிகளை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில் அமைச்சரை வரவேற்க நடைபெற்ற பேனர் வைக்கும் பணியின் போது 12வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சட்டவிரோத பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு வழங்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் வழக்கு ஒன்றில் பேனர்கள் வைக்கப்படாது என திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்ததும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு பேனர் வைக்கும் ஒப்பந்தத்தை எடுத்த நபர் விதிகளை மீறி சிறுவனை பணியில் அமர்த்தியதாகவும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு தற்காலிகமாக ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் 2019ம் ஆண்டு கட்சி உறுப்பினர்கள் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். அனுமதியின்றி பேனர் வைக்க யாருக்கும் உரிமை இல்லை என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மாவட்டங்களுக்கு சென்றபோது ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும் தெரிவித்தார். மேலும், பேனர் வைப்பதை தடை செய்ய உரிய விதிமுறை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.