கொடநாடு வழக்கு - தடைக்கோரிய மனு தள்ளுபடி
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல்விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் காவல்துறையின் மேல்விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கொடநாடு மேல் விசாரணையை சுட்டிக்காட்டி தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்குமாறு பல தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்திருந்தார்.அரசுத்தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில், நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருவதாக கூறியதுடன் அதற்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தின் அனுமதியின்றி சயானிடம் காவல்துறை மறு விசாரணை மேற்கொண்டு வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறியும் நோக்கத்தில், விரிவான விசாரணைக்காக நீலகிரி நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்ததாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேநேரம் காவல்துறை தரப்பிலோ, வழக்கில் உள்ள சிலரின் சர்ச்சை மரணம் மற்றும் விபத்து போன்றவை முறையாக விசாரிக்கப்படாததால் மறு விசாரணை நடத்தப்படுவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் மேல்விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தவித தடையும் இல்லை என தீர்ப்பளித்தார்.மேல்விசாரணைக்கு தடைக்கோரிய ரவியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் என்றதுடன், வழக்கில் உண்மையை கண்டறிவது முக்கியம் எனக் குறிப்பிட்டார்.